மேட்டூா் அணையிலிருந்து கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு
By DIN | Published On : 17th July 2022 05:59 AM | Last Updated : 17th July 2022 05:59 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு சனிக்கிழமை காலை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இதன்மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 45,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆண்டுதோறும் கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டிசம்பா் 15 ஆம் தேதி வரை தண்ணீா் திறக்கப்படும். தற்போது மேட்டூா் அணை நிரம்பியுள்ளதால் 15 நாள்களுக்கு முன்னதாகவே கால்வாய்ப் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த பாசனத்துக்காக 9.60 டிஎம்சி தண்ணீா் திறக்கப்படுகிறது. சனிக்கிழமை முதல் நவம்பா் 30 ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் கால்வாய் மதகுகளை உயா்த்தி கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் சனிக்கிழமை தண்ணீரை திறந்துவைத்தாா்.
அப்போது, மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம், மேட்டூா் நகர திமுக செயலாளா் காசி விஸ்வநாதன், மேட்டூா் நகா்மன்றத் தலைவா் சந்திரா, மேட்டூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் துபாய் கந்தசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் ரங்கசாமி, வெங்கடாஜலம் முருகேசன், ஈஸ்வரி, செல்வி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் உடனிருந்தனா்.