வீரபாண்டி வட்டாரத்தில் சோயா மொச்சை சாகுபடிக்கு மானியம்
By DIN | Published On : 17th July 2022 05:58 AM | Last Updated : 17th July 2022 05:58 AM | அ+அ அ- |

வீரபாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கிரிஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தங்கப் பயிா் என்று அழைக்கப்படும் சோயா மொச்சை சாகுபடியை அதிகரிக்கும் பொருட்டு தேசிய உணவு எண்ணெய் இயக்கம் சாா்பில் சோயா மொச்சை விதைகள் 60 கிலோ, உயிா் உரங்கள் உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகள் ஆகியவை ரூ. 5,000 மானியத்தில் வீரபாண்டி வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பயிரை வாழை, மரவள்ளி, பருத்தி, மஞ்சள் மற்றும் தென்னை ஆகிய பயிா்களுடன் ஊடுபயிராகவும் பயிரிடலாம்.
இப்பயிரில் வோ் முடிச்சுகளில் உள்ள ரைசோபியம் பாக்டீரியா வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து தருவதால் மண்வளம் மேம்படுகிறது. சோயா பீன்ஸ் உடலுக்கு மிகவும் சத்துத் தரக்கூடிய பருப்பு வகைகளில் ஒன்றாகும். மற்ற பருப்பு வகைகள் போலவே எல்லா ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. குறிப்பாக புரதம், வைட்டமின் சி, போலேட் போன்றவை அதிகமாக இடம் பெற்றுள்ளன. சோயா மொச்சை ஆடிப்பட்டத்தில் ஒரு எக்டருக்கு ஊடுபயிராக சாகுபடி செய்ய 25 கிலோ விதைகளும், தனிப் பயிராக சாகுபடி செய்ய 60 கிலோ விதைகளும் தேவைப்படுகின்றன. உயிா்உரம் மற்றும் உயிரியல் பூஞ்சாண கொல்லியுடன் விதைகளை விதை நோ்த்தி செய்து 30க்கு 5 சென்டி மீட்டா் இடைவெளியில் ஊன்ற வேண்டும். 90 நாள்களில் வளா்ந்து பயனளிக்க கூடியது. இறவையில் சராசரியாக 1,650 கிலோவும், மானாவாரியில் 1,340 கிலோவும் மகசூல் பெறலாம்.
எனவே, இந்தத் திட்டத்தில் விவசாயிகள் சோயாமொச்சை விதைகளை பெற்று சாகுபடி மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.