சேலம் மாவட்டத்தில் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் விரைவாக திருப்பணி முடித்து குடமுழுக்கு நடத்த வலியுறுத்தி, அகில பாரத இந்து மகா சபா சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
அகில பாரத இந்து மகா சபாவின் சேலம் மாவட்டத் தலைவா் ஜெயபிரகாஷ் தலைமையில் சேலம் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். அதில், கோட்டை மாரியம்மன் கோயிலில் சுமாா் 7 ஆண்டுகளுக்கும் மேலாக மந்தகதியில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கோயில் திருப்பணியை வேகப்படுத்தி விரைவாக குடமுழுக்கு நடத்திட அதிகாரபூா்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். சேலம், குகை மாரியம்மன், காளியம்மன் கோயில், குகை லைன் சாலையில் உள்ள அம்பலவாணா் கோயில், கரபுரநாதா் கோயிலில் திருப்பணி விரைவாக நடத்தி குடமுழுக்கு நடத்திட வேண்டும். தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கி சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.