விசாரணை கைதிகள் உயிரிழப்பைதவிா்க்க போலீஸாருக்கு அறிவுரை
By DIN | Published On : 17th June 2022 02:43 AM | Last Updated : 17th June 2022 02:43 AM | அ+அ அ- |

காவல் நிலையத்தில் விசாரணை கைதிகள் உயிரிழப்பு ஏற்படாமல் விசாரணை நடத்த வேண்டுமென வாழப்பாடி காவல் உட்கோட்ட போலீஸாருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் விசாரணை கைதிகள் உயிரிழப்பு ஏற்படாத வகையில் விசாரணை நடத்த வேண்டும் என தமிழக காவல் துறை இயக்குநா் சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளாா்.
இதையடுத்து, வாழப்பாடி காவல் உட்கோட்டத்திலுள்ள காரிப்பட்டி, வாழப்பாடி, ஏத்தாப்பூா், கருமந்துறை, கரியக்கோயில் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், தலைமை காவலா்கள் மற்றும் காவலா்கள் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் வாழப்பாடி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வாழப்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளா் (பொ) சக்கரபாணி தலைமை வகித்தாா். பொதுமக்களிடம் விசாரணை நடத்தும்போது தன்மையாக நடந்துகொள்ள வேண்டும். இரவு நேரங்களில் விசாரிக்க கூடாது.
விசாரணை கைதிகளைத் கடுமையாக நடத்த கூடாது. புகாா், வழக்கு தொடா்பாக கைதிகளை விசாரிக்கும்போது தாக்குதலில் ஈடுபடாமல் வாக்குமூலம் பெற வேண்டும்.
காவல் நிலையங்களில் விசாரணை கைதிகள் உயிரிழப்பு ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டுமென கூட்டத்தில் போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.