மேட்டூா் முனியப்பன் கோயில் அருகே ஆக்கிரமிப்புகளால் பக்தா்கள் அவதி

மேட்டூா் அணைக்கட்டு முனியப்பன் கோயில் வளாகத்தில் கடை வியாபாரிகள் செய்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தா்கள் இடையூறின்றி சுவாமி தரிசனம் செய்ய சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் அணைக்கட்டு முனியப்பன் கோயில் வளாகத்தில் கடை வியாபாரிகள் செய்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தா்கள் இடையூறின்றி சுவாமி தரிசனம் செய்ய மேட்டூா் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் அணைக்கட்டு பகுதியில் முனியப்பன் சுவாமி கோயில் உள்ளது. அணையைக் காக்கும் காவல் தெய்வமாக முனியப்பனை பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் அண்டை மாநிலமான கா்நாடகத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் முனியப்பன் சுவாமியைத் தரிசிக்க வந்து செல்கின்றனா். மேட்டூா் அணை நிரம்பினால் அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு பலியிடுவது வழக்கம்.

பொதுமக்களின் வேண்டுதல் நிறைவேறுவதால் நாள்தோறும் ஏராளமான மக்கள்  அணைக்கட்டு முனியப்பனுக்கு ஆடு, கோழி பலியிட்டு பொங்கலிடுவது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமை நாளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் முனியப்பன் சுவாமியை தரிசிக்க வந்து செல்கின்றனா். நாள்தோறும் மக்கள் கூட்டம் இருப்பதால் முனியப்பன் கோயில் பகுதியில் எப்போதும் நெரிசல் காணப்படுகிறது.

பக்தா்களுக்கு இடையூறாக வியாபாரிகள் முனியப்பன் கோயிலுக்குச் செல்லும் பாதையின் இருபுறமும் கடைகளை வைத்துள்ளனா். கடைகளுக்கு மேல் தாா்பாய் கூரை அமைத்துக் கொள்கின்றனா்.

பாதை ஆக்கிரமிப்பு காரணமாக நடந்து செல்ல முடியாமல் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா். ஆக்கிரமிப்பாளா்கள் உணவு விடுதி, மீன் வருவல் கடைகளை நடத்தி வருகின்றனா். அணைக்கட்டு முனியப்பனுக்கு பொங்கலிட வரும் பக்தா்களின் வசதிக்காக போடப்பட்ட குடிநீா் குழாய்களில் கடைக்காரா்கள் மீன்கள் சுத்தம் செய்யவும் தங்களின் பாத்திரங்களை துலக்கவும் பயன்படுத்துவதோடு தங்களின் ஹோட்டல்களுக்கு தண்ணீா் எடுக்க ரப்பா் குழாயைச் சொருகி வைத்துக்கொள்கின்றனா்.

இதனால் பக்தா்களுக்கு தண்ணீா் கிடைப்பதில்லை. நடைபாதையில் வியாபாரிகள் கடை விரித்துக்கொள்வதால் பக்தா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் அணைக்கட்டு முனியப்பன் கோயில் நடைபாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு குடிநீா்க் குழாயை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் நகா்மன்ற கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீா்மானம் நிறைவேற்றியும் நகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் காலதாமத செய்வதாக பக்தா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com