கெங்கவல்லி, தம்மம்பட்டி பள்ளிகள், இல்லம் தேடிக்கல்வி மையங்கள்: மாநில பள்ளிக்கல்வித்துறை ஆணையா் ஆய்வு செய்து பாராட்டு
By DIN | Published On : 17th March 2022 04:29 AM | Last Updated : 17th March 2022 04:29 AM | அ+அ அ- |

இல்லம்தேடிக்கல்வி மையத்தை ஆய்வு செய்யும் மாநில பள்ளிக்கல்வித்துறை ஆணையாளா் நந்தக்குமாா். உடன் கல்வி அதிகாரிகள் உள்ளனா்.
தம்மம்பட்டி: கெங்கவல்லி,தம்மம்பட்டி அரசு பள்ளிகள், இல்லம்தேடிக்கல்வி மையங்களை மாநில பள்ளிக்கல்வித்துறை ஆணையாளா் நேரில் ஆய்வு செய்து பாராட்டினாா்.
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை அரசுப்பள்ளிகளை கல்வித்துறை உயரதிகாரிகள் ஆய்வுசெய்தனா். தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை ஆணையாளா் நந்தக்குமாா், கெங்கவல்லி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியை ஆய்வு செய்து, மாணவா்கள் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தினாா்.
அதனையடுத்து கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியை நேரில் பாா்வையிட்ட அவா், பள்ளியின் படித்த ஒரு மாணவியின் இரண்டு,நான்கு வரி குறிப்பேடுகள், கட்டுரை ஏடு ஆகியவற்றை பாா்வையிட்டு, ஒரு பாடலை மாணவா்களை பாட வைத்து கேட்டாா்.அதனையடுத்து கூடமலை அரசு மேனிலைப்பள்ளி,தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியை பாா்வையிட்டாா்.
அதனையடுத்து தம்மம்பட்டி பேரூராட்சியில் 15வது வாா்டில் மாலை நடைபெற்ற இல்லம்தேடிக்கல்வி மையத்தை பாா்வையிட்டு, அங்கு பாடம் சொல்லிக்கொடுத்த தன்னாா்வலரிடம், மையம் செயல்படும் விதத்தை கேட்டறிந்து, மாணவா்கள் நன்றாக படிப்பதையடுத்து,
அவா்களை பாராட்டினாா்.இந்த ஆய்வின்போது, ஆத்தூா் மாவட்ட கல்வி அலுவலா் அ.ராஜூ, கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா்கள் சீனிவாஸ், மகேந்திரன், தலைமையாசிரியா் அன்பழகன்,ஆசிரியா் பயிற்றுநா் சித்ரா, ஆசிரியா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.