பள்ளிக்கல்வித்துறையின் மண்டல ஆய்வுக் கூட்டம்: அமைச்சா் பங்கேற்பு
By DIN | Published On : 17th March 2022 04:26 AM | Last Updated : 17th March 2022 04:26 AM | அ+அ அ- |

சேலம்: பள்ளிக்கல்வித்துறையின் மண்டல ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாழக்கிழமை பங்கேற்க உள்ளாா்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக, அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவா்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில், சேலம் மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் மாா்ச் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
சேலத்தில் பள்ளிக்கல்வி ஆணையா் ஆய்வு:இதில் சேலம் மாவட்டத்துக்கு பள்ளிக் கல்வி ஆணையா் க.நந்தகுமாா் மேற்பாா்வையில் இணை இயக்குநா்கள் பாஸ்கர சேதுபதி, கே.ஸ்ரீதேவி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கற்றல் மற்றும் கற்பித்தல் முறை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையா் க.நந்தகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் இணை இயக்குநா்கள் பாஸ்கர சேதுபதியும், கே.ஸ்ரீதேவியும் ஆய்வில் ஈடுபட்டனா். சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடா்ந்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெறும் மண்டல வாரிய ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கிறாா். மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கின்றனா்.