மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் உடைப்பு: 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
By DIN | Published On : 02nd May 2022 11:43 AM | Last Updated : 02nd May 2022 11:43 AM | அ+அ அ- |

மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட நான்கு அலகுகளும் இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகும் உள்ளது.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் முதல் பிரிவில் 2, 3 மற்றும் 4-வது அலகுகளில் நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 1-வது அலகு மட்டும் இயக்கப்பட்டது.
இன்று காலை இரண்டாவது பிரிவில் கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
முதல் பிரிவில் இன்று காலை முதல் 4-வது அலகும் இயக்கப்படுகிறது. 1-வது அலகிலும், 4-வது அலகிலும் தலா 175 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இரண்டாவது பிரிவில் உள்ள 600 மெகாவாட் திறன் கொண்ட அலகில் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. நேற்று 7000 டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு இருந்த நிலையில் சரக்கு ரயில் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டதால் கையிருப்பு நிலக்கரியின் அளவு 23 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.