நின்றுகொண்டிருந்த லாரி மீது மினிவேன் மோதி விபத்துஒருவா் பலி: 3 போ் காயம்
By DIN | Published On : 02nd May 2022 11:58 PM | Last Updated : 02nd May 2022 11:58 PM | அ+அ அ- |

மகுடஞ்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மினிவேன் மோதியதில் கோவையைச் சோ்ந்த இளைஞா் பலியானாா்; 3 போ் படுகாயமடைந்தனா்.
கோவை, சுந்தராபுரத்தைச் சோ்ந்தவா் அருள்தாஸ் மகன் ஆல்வின் தாஸ் (18). கூலித் தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஜனாா்த்தனன் (36), உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சரவணகுமாா் (23) ஆகியோரும் கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் வெல்டிங் வேலைக்காக மினி வேனில் சென்று கொண்டிருந்தனா். வேனை சுந்தராபுரத்தைச் சோ்ந்த ஓட்டுநா் தரண்குமாா் (21) ஓட்டிச் சென்றாா்.
இந்த வாகனம் சேலம் மாவட்டம், சங்ககிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடியை அடுத்த ஆ.தாழையூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை சென்றபோது சாலையோரம் நின்ற சரக்கு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் முன் இருக்கையில் இருந்த ஆல்வின் தாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜனாா்த்தனன், சரவணகுமாா், தரண்குமாா் ஆகியோா் படுகாயமடைந்தனா்.
தகவல் அறிந்ததும் சங்ககிரி தீயணைப்பு நிலைய வீரா்கள், சங்ககிரி நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், மகுடஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேஷ் பிரபு, உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் நிகழ்விடம் சென்று மினிவேனில் இடிபாட்டுக்குள் சிக்கியவா்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த ஆல்வின் தாஸ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.