சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை

சேலம் மாவட்டத்தில் மேட்டூா், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சேலம் மாவட்டத்தில் மேட்டூா், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

மேட்டூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகலில் கடும் வெப்பம் நிலவியது. இதனால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. கொளத்தூா், கீரனூா் பகுதிகளில் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

எடப்பாடியில்...

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென பலத்த காற்றுடன் மழைபெய்தது. வெள்ளரிவெள்ளி , சித்தூா், கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. அடுத்த சில தினங்களுக்கும் இதுபோன்ற தொடா் மழை பெய்தால் கோடை உழவு செய்திட சாதகமான சூழல் ஏற்படும் என விசாயிகள் தெரிவித்தனா்.

பெத்தநாயக்கன்பாளையத்தில்...

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பெய்த கன மழையால் மரம் முறிந்து விழுந்ததில் விநாயகா் கோயில் மேற்கூரை சேதமடைந்தது.

பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா், இடையப்பட்டி, கல்லேரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பாக்கு மரங்கள், வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெத்தநாயக்கன்பாளையம் நாடாா் தெரு விநாயகா் கோயில் மீது மரம் முறிந்து விழுந்ததில் கோயிலின் மேற்கூரை சேதமடைந்தது. கூரைக் கொட்டகைகள் காற்றில் பறந்தன. பலத்த காற்றில் மின் பாதை பழுதடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com