பூலாம்பட்டி காவிரிக் கதவணை பகுதியில் பராமரிப்பு பணிகள் துவக்கம்: மின் உற்பத்தி நிறுத்தம்

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள காவிரிக் கதவணை பகுதியில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு
பூலாம்பட்டி காவிரிக் கதவணை பகுதியில் பராமரிப்பு பணிகள் துவக்கம்: மின் உற்பத்தி நிறுத்தம்

எடப்பாடி: எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள காவிரிக் கதவணை பகுதியில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.

இங்குள்ள நீர் மின் நிலையத்தின் வாயிலாக 30 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. மேலும் கதவணை நீர்ப்பரப்பில் சேலம் - ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் இக் கதவணையின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் நேற்று முதல் அணையின் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் அணையில் தேக்கப்பட்டிருந்த தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டது. இதனால் கடல் போல் விரிந்து பரந்திருந்த அணைப் பகுதி தற்போது நீரோடை போல் வற்றி வறண்டு காணப்படுகிறது.

மேலும் அணையின் ஷட்டர் பகுதிகள் மற்றும் மதகுகள், நீர்மின் நிலைய அமைப்புகள் புனரமைக்கப்பட்டு வரும் நிலையில் இக்  கதவணையில் தற்காலிகமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அணைப்பகுதியில் செயல்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து போதிய நீரின்றி நிறுத்தப்பட்டதால்  சிறிய பரிசில்கள் மற்றும் படகுகள் மூலமாக பயணிகள் மறு கரைக்கு சென்று வருகின்றனர்.

அணையின் பராமரிப்பு பணிகள் நிறைவடைய சுமார் 20 நாட்கள் ஆகும் எனவும், பராமரிப்பு பணிகள் முழு அளவில் நிறைவடைந்தவுடன் மீண்டும் அணையில் நீர்த்தேக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும் என சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com