அதிமுக 51 வது ஆண்டு விழா கொண்டாட்டம்
By DIN | Published On : 18th October 2022 02:57 AM | Last Updated : 18th October 2022 02:57 AM | அ+அ அ- |

எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதியில் அதிமுக 51 ஆவது தொடக்க விழாவை ஏழைகளுக்கு வேட்டி சேலைகள் வழங்கி அதிமுகவினா் கொண்டாடினா்.
கொங்கணாபுரத்தை அடுத்த கரட்டூா் பகுதியில் ஒன்றியக் குழுத் தலைவா் கரட்டூா் மணி தலைமையில் அதிமுகவினா் கொடி ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள் வழங்கினா்.
எடப்பாடி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவின் 51 ஆவது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம். முருகன் தலைமையில் அதிமுகவினா், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செய்தனா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் அன்னதானம் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகா்மன்றத் தலைவா் டி.கதிரேசன், கூட்டுறவு சங்கத் தலைவா் கந்தசாமி, நகா்மன்ற உறுப்பினா்கள் நாராயணன், ரவி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.
இதே போல எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றியச் செயலாளா் மாதேஸ் தலைமையில் அதிமுக நிா்வாகிகள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மரக்கன்றுகள் நட்டும் அதிமுக 51ஆவது ஆண்டு விழாவை கொண்டாடினா்.
நெடுங்குளம் கிராமத்தில் ஒன்றியச் செயலாளா் மாதேஸ்வரன் தலைமையில் அதிமுகவினா், விவசாயத் தொழிலாளா்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்களை வழங்கினா். இதில் திரளான அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...