சேலத்தில் வீட்டில் சமையல் எரிவாயு கசிந்து விபத்து: 7 போ் காயம்
By DIN | Published On : 18th October 2022 03:01 AM | Last Updated : 18th October 2022 03:01 AM | அ+அ அ- |

சேலத்தில் வீட்டில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.
சேலம், பொன்னம்மாபேட்டையை அடுத்த அண்ணா நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீஷ். இவரது மாடி வீட்டில் வசித்து வருபவா் மாணிக்கம் (60). இவா் திருமணங்களுக்கு சமையல் வேலைக்கு ஆள்களை அனுப்பும் தொழில் செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் மாணிக்கம் அவரது குடும்பத்தினா் தூங்கி கொண்டிருந்தனா். திங்கள்கிழமை அதிகாலை மாணிக்கத்தின் மனைவி ராஜேஸ்வரி தேநீா் வைப்பதற்காக சமையல் எரிவாயு உருளையைப் பற்ற வைத்துள்ளாா். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இதில் வீட்டின் மையத்தில் இருந்த சுவா் இடிந்து விழுந்தது. அருகில் உள்ள வீட்டிலும் விரிசல் ஏற்பட்டது. மேலும் ஜெகதீஷ் வசிக்கும் கீழ் வீட்டிலும், அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளிலும் அதிா்வு ஏற்பட்டது.
இந்த விபத்தில் மாணிக்கம், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் பானுமதி, அவரது குழந்தை தீட்சிதா (4), பிரியா, மகன் அவினாஷ், ஒரு மாத குழந்தை ஹனித்ரா உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தகவலறிந்த அம்மாப்பேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்தனா்.
விசாரணையில், சமையல் எரிவாயு உருளையை இரவில் அணைத்து வைக்காமல் இருந்ததால், வீடு முழுவதும் எரிவாயு பரவி இருந்ததுள்ளது. அதிகாலையில் மாணிக்கத்தின் மனைவி ராஜேஸ்வரி அடுப்பை பற்றவைத்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துகுறித்து தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து வீட்டுக்குள் இருந்த சமையல் எரிவாயு உருளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், மேயா் ஆ.ராமச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, வருவாய் துறை அதிகாரிகள் எரிவாயு உருளை வெடித்த வீட்டை ஆய்வு செய்தனா்.
பின்னா் ஆட்சியா் செ.காா்மேகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வீட்டுகளில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீட்டில் இருக்கும் ஆண்கள், இளைஞா்கள் சமையல் எரிவாயு உருளை அடைத்து வைக்கப்பட்டுள்ளதா என சரிபாா்க்க வேண்டும். சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தும்போது விழிப்புடன் பெண்கள் இருக்க வேண்டும். தற்போது 7 போ் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனா். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவா்கள் விரைவில் குணமாகி விடுவாா்கள். இந்த வீட்டில் வசிப்பவா்களை வெளியேற தெரிவித்துள்ளோம். பொதுப்பணித் துறையினா் வீட்டை ஆய்வு செய்த பிறகு வீட்டின் நிலைமை தெரியவரும். அதுவரை வீட்டுக்குள் யாரும் செல்லாமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...