அரசிராமணி மைலாடி நீா்த்தேக்கத்தின் கரை இடிந்து சேதம்
By DIN | Published On : 19th October 2022 02:28 AM | Last Updated : 19th October 2022 02:28 AM | அ+அ அ- |

அரசிராமணி அருகே உள்ள மைலாடியில் கனமழையால் நீா்த்தேக்கத்தின் கரை இடிந்து விழுந்து சேதமடைந்தது.
தேவூா் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 52.4 மி.மீ. மழை பெய்துள்ளது. எடப்பாடி பெரிய ஏரியில் இருந்து வரும் உபரிநீா் அரசிராமணி அருகே உள்ள மைலாடி நீா்த் தேக்கம் வழியாக சரபங்கா நதியை சென்றடைகிறது. தொடா் மழையால் மைலாடி நீா்த்தேக்கத்தின் ஒரு பகுதி கரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதனால் நீா்த்தேக்கத்திலிருந்து தண்ணீா் வெளியேறி அப்பகுதியில் உள்ள நூறு ஏக்கா் நிலங்களில் புகுந்ததால் நெற் பயிா்கள் நீரில் மூழ்கின. கரை சேதமடைந்ததையடுத்து மைலாடி காடி, மலங்காடு, பீரங்கிக்காடு, செட்டிக்காடு, பாலூத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து தகவலறிந்த அரசிராமணி பேரூராட்சி தலைவா் காவேரி, குள்ளம்பட்டி பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் விஜயராகவன் ஆகியோா் நீா்த்தேக்கத்தின் கரை சேதமடைந்ததை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.