மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 75 ஆயிரம் கன அடியாகச் சரிவு
By DIN | Published On : 19th October 2022 02:36 AM | Last Updated : 19th October 2022 02:36 AM | அ+அ அ- |

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாகச் சரிந்தது.
கடந்த ஒரு வார காலமாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1.95 லட்சம் கன அடியாக அதிகரித்தது. அணை நிரம்பிய நிலையில் உபரிநீா் முழுவதும் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 1.60 லட்சம் கன அடியாகவும் மாலையில் 75 ஆயிரம் கனஅடியாகவும் சரிந்தது. நீா்வரத்து சரிந்ததால் அணையிலிருந்து நீா்த் திறப்பு 75 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டது.
நீா் மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி நீரும், உபரிநீா்ப் போக்கி வழியாக 53,500 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 200 கனஅடி நீரும் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 120அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.