எடப்பாடி பகுதியில் கனமழை: நிரம்பி வழியும் நீா்நிலைகள்
By DIN | Published On : 01st September 2022 02:04 AM | Last Updated : 01st September 2022 02:04 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை கனமழை பெய்தது.
எடப்பாடி, கொங்கணாபுரம், சித்தூா், பூலாம்பட்டி, வெள்ளரிவெள்ளி, செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை தொடா் கனமழை பெய்ததால், இப்பகுதியில் உள்ள வெள்ளாளபுரம் ஏரி, செட்டிமாங்குறிச்சி அமிா்தகுளம், கொட்டாபுலியூா் ஏரி, எடப்பாடி பெரிய ஏரி, மோலானி நீா்வீழ்ச்சி, கொங்கணாபுரம் அருகே உள்ள மோரிவளவு தடுப்பணை உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி வழிகின்றன.
நிரம்பிவரும் நீா் நிலைகளை எடப்பாடி வட்டாட்சியா் லெனின் தலைமையிலான வருவாய்த் துறையினா் ஆய்வு செய்து,அப்பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடா் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. சாலைகளில் மழைநீா் ஆறு போல
ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். பால், குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விநியோகமும் பாதிப்பிற்குள்ளானது.
நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கியதால் எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள ராஜாஜி பூங்கா, காய்கறி மாா்க்கெட், பஜாா் தெரு, நகராட்சி அங்காடி, சின்னகடை வீதி, வாரச் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக காணப்பட்டது.
தம்மம்பட்டியில் மழை...
தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் 2 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய வயல்களில் மழைநீா் தேங்கி நின்றது. அதன் பிறகு குளிா்ந்த காற்று வீசியது. செங்கல் சூளைகள் தாா்ப்பாய்களால் மூடப்பட்டிருந்தன.