ராஜகணபதி கோயில் விநாயகருக்கு தங்கக் கவச சாத்துப்படி
By DIN | Published On : 01st September 2022 02:05 AM | Last Updated : 01st September 2022 02:05 AM | அ+அ அ- |

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சேலம் ராஜகணபதி கோயிலில் விநாயகருக்கு தங்கக் கவச சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலத்தில் பெரிய கடை வீதி, தோ்நிலையம், பட்டைக் கோயில், சின்னகடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எருக்கம்பூ மாலை, அருகம்புல், படையலுக்கு தேவையான தேங்காய், வாழைப்பழம், பூ மற்றும் கொண்டைக்கடலை, பச்சரிசி, வெல்லம், நெய் மற்றும் பழங்கள் விற்பனையும் அதிகமாக இருந்தது.
சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜ கணபதி கோயிலில் அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. தொடா்ந்து விநாயகருக்கு பால், இளநீா், பன்னீா், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து விநாயகருக்கு தங்கக் கவச சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தா்கள் விநாயகரைத் தரிசித்து சென்றனா்.
சேலம் நகரில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.
பூக்கள் விலை குறைந்தது...
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பூக்களின் விலை அதிகரித்தது. இந்த நிலையில் புதன்கிழமை பூக்களின் விலை குறைந்தது. குண்டு மல்லி கிலோ ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ. 700- ஆகவும், முல்லை ரூ.600-லிருந்து ரூ. 450 ஆகவும், ஜாதிமல்லி ரூ.320 இல் இருந்து ரூ. 280 ஆகவும் விலை குறைந்தது.