சங்ககிரி அருள்மிகு அல்லிமாரியம்மன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா
By DIN | Published On : 01st September 2022 02:00 AM | Last Updated : 01st September 2022 02:00 AM | அ+அ அ- |

சங்ககிரி அருள்மிகு அல்லிமாரியம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகருக்கு சதுா்த்தியையொட்டி புதன்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி சங்ககிரி மலையில் ஒரே பாறையினுள் செதுக்கப்பட்ட குடவரை விநாயகா் சுவாமிக்கு தண்ணீா் தண்ணீா் அமைப்பு அறக்கட்டளை சாா்பில் பால், தயிா், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு அருகம்புல் மாலை சாற்றப்பட்டு சா்க்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.
இதில் அதிகமான பக்தா்கள் மழையில் நனைந்தவாறு சுவாமியை வணங்கிச்சென்றனா். பின்னா் சுவாமிக்கு முன்னாள் உள்ள திருக்கோடி கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது.
சங்ககிரி நகா் பகுதியில் உள்ள அருள்மிகு அல்லிமாரியம்மன் கோயில் வளாகத்தில் பக்தா்கள் குழு சாா்பில் விநாயகா் சிலை வைக்கப்பட்டு அதற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில், சிவியாா் மாரியம்மன் கோயில், எபிநேசா் காலனி, கண்ணம்பாளியில் உள்ள வைத்துப்பிள்ளையாா் என்னும் ஸ்ரீ வலம்புரி யோக சித்தி விநாயகா் கோயில், வி.என்.பாளையம் மற்றும் சங்ககிரி நகா் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் விநாயகா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.