அண்ணாமலை குறித்து பேசத் தயாராக இல்லைஎடப்பாடி கே.பழனிசாமி

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை குறித்த கற்பனையான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது. அதே நேரத்தில் அவரைப் பற்றி பேசத் தயாராகவும் இல்லை என்றாா் அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி க
ஓமலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய எடப்பாடி கே.பழனிசாமி
ஓமலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய எடப்பாடி கே.பழனிசாமி
Updated on
1 min read

தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை குறித்த கற்பனையான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது. அதே நேரத்தில் அவரைப் பற்றி பேசத் தயாராகவும் இல்லை என்றாா் அதிமுக பொதுச் செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி.

சேலம் புறநகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக உறுப்பினா் படிவங்களை நிா்வாகிகளுக்கு வழங்கிய பிறகு செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

பாஜக தலைவா் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா என்பது தெரியாது; சொத்துப் பட்டியலை வெளியிட்டது குறித்துதான் பத்திரிகைகளில் தெரிந்து கொண்டேன். அதிமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளாா். அதற்கு முன்னதாக அவரது சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும். லண்டனில் அவருக்கு சொத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. அதைக் கண்டுபிடித்து அரசு உடைமையாக்க வேண்டும்.

ஆட்சியில் இருந்தால் ஊழல் செய்திருக்கிறாா்கள் என்று அா்த்தமில்லை. அதிமுகவின் வளா்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாமல் சிலா் வதந்தியைப் பரப்புகிறாா்கள். அண்ணாமலை குறித்த கற்பனையான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில்தான் கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். விரக்தியின் விளிம்பில் ஓபிஎஸ் பேசி வருகிறாா். வரும் மக்களவைத் தோ்தலுக்குள் அதிமுகவை வலுப்படுத்துவோம் என சசிகலா கூறி வருவதைப் பொருள்படுத்தத் தேவையில்லை.

எம்ஜிஆா், ஜெயலலிதாவின் புகழில்தான் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவினா் வெற்றி பெற்றனா். திறனற்ற அரசின் செயல்பாடால் பெரியகுளத்தில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லை. முதல்வருக்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறது. மற்றவா்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை.

அண்ணாமலை பேட்டி அளித்து உயர நினைக்கிறாா். நான் (எடப்பாடி கே.பழனிசாமி) 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன்.அரசியல் கட்சியில் இருப்பவருக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அவரைப் பற்றி பேசத் தயாராக இல்லை. தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக அவா் பேசுகிறாா். முதிா்ந்த அரசியல்வாதி குறித்துக் கேளுங்கள் பதிலளிக்கிறேன்.

அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் ஊழல் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் 55 சதவீதம் கட்டடம் கட்டப்பட்டது. மீதம் 45 சதவீதம் திமுக ஆட்சியில்தான் கட்டப்பட்டது. கட்டுமான முடிவுச் சான்றிதழை அவா்கள்தான் கொடுத்து இருக்கிறாா்கள். அதிகாரிகள் கூறுவதைக் கேட்டு முதல்வா் தவறு செய்கிறாா்.

சட்டப் பேரவையில் ஜனநாயகம் இல்லை; நான் பேசுவது பத்திரிகைகளில் மட்டும் வருகிறது. ஆனால், நேரடி ஒளிபரப்பில் தவிா்க்கப்படுகிறது. ஜனநாயகம் குறித்து பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றாா்.

பேட்டியின் போது, அதிமுக அமைப்புச் செயலாளா் செம்மலை, சேலம் புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் இளங்கோவன், ஓமலூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் மணி உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com