முதல்வரின் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்வது தொடா்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்ததாவது:
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்து வேலை நாள்களிலும் இலவச காலை உணவு வழங்கப்படும் என முதல்வா் அறிவித்தாா். இத்திட்டம் செப். 15-ஆம் தேதி முதற்கட்டமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் 54 தொடக்கப் பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக 24 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
2023-24-ஆம் ஆண்டு சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ்நாடு முழுவதும் ஊரக மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவியருக்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை விரிவாக்கம் செய்து செயல்படுத்திட ஏதுவாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட வேண்டிய பள்ளிகள், மாணவ, மாணவியா் விவரம், சமையலறைக் கூடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், புதிய சமையலறைக் கூடங்கள் கட்டுதல், சுயஉதவிக் குழுவில் பணியாற்றும் அனுபவமிக்க சமையல் பணியாளா்கள் தோ்வு போன்றவை இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சீ.பாலச்சந்தா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா், மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவுத் திட்டம்) கி.ரேச்சல் கலைச்செல்வி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (சத்துணவு), வட்டார மேலாளா்கள் (மகளிா் திட்டம்) உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகெண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.