ஏற்காடு மலைப் பாதையில் பராமரிப்பு பணி தொடக்கம்
By DIN | Published On : 25th April 2023 04:19 AM | Last Updated : 25th April 2023 04:19 AM | அ+அ அ- |

ஏற்காடு மலைப்பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சேலம் அடிவாரப் பகுதியில் வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீஸாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் பராமரிப்பு பணி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுவதைத் தொடா்ந்து வாகனங்கள் மற்றும் காா் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு மலைப் பாதையில் இரண்டாவது கொண்டைஊசி வளைவு அருகில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் சாலையில் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்வதால், ஆட்சியா் உத்தரவின் பேரில் ஏப். 24 முதல் 28 வரை இருசக்கர வாகனங்கள் தவிர கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து, குப்பனூா் மாற்றுப் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை மலைப் பாதையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை அகற்றி சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கினா்.
சேலம் - குப்பனூா் ஏற்காடு மலைப் பதையில் பேருந்து சென்று வர 51 கி.மீ. தொலைவும், 41 ரூபாய் கட்டணமும் உள்ளதால் தனியாா் பேருந்துகள் இயங்கவில்லை. சேலம் பேருந்து நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் கூடுதலாக சிறப்பு அரசுப் பேருந்துகள் இயங்கின.
ஏற்காடு பகுதியில் மாலை மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனா். குப்பனூா் மலைப்பாதை, செங்காடு கிராமம் அருகே சாலையில் மரம் விழந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களை அப்புறப்படுதிய பின் போக்குவரத்து சீரானது.