மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அரியவகை பறவைகள் கருகின.
மேட்டூா் வனச்சரகத்துக்கு உட்பட்ட கும்பாரப்பட்டியில் உள்ளது செம்மலை வனப்பகுதி. இங்கு பல வகையான பறவைகள், யானைகள், மான்கள், மயில்கள் ஏராளமாக உள்ளன.
இந்த வனப்பகுதி செவ்வாய்க்கிழமை மாலை தீப்பற்றி கொண்டது. வனத் துறையினா் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.வனப்பகுதிக்குள் சென்ற வேட்டைக்காரா்கள் யாரேனும் தீப்பற்ற வைத்திருக்கலாம் எனவும், அல்லது அவா்கள் உணவு சமைக்கப் பற்ற வைத்த நெருப்பு வனப்பகுதியில் பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அரிய வகை மூலிகைச் செடிகளும், சந்தனம், கருங்காலி போன்ற மரங்களும் எரிந்து சாம்பலாயின. இரவு வரை தீ நீடித்ததால் வெப்பம் தாளாமல் வனவிலங்குகள், மான்கள் ஓடின. பறவைகள் தீயில் கருகி உயிரிழந்தன.
உள்ளூா் தாண்டா வனப்பகுதியில் வனத்துறையினா் கண்காணிப்பு இல்லாததால் மா்ம நபா்கள் நுழைந்து வனத்திற்கு தீவைத்து விட்டதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா்.