குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் மாசடைந்து வரும் மூக்கனேரி!துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி

சேலம் மாநகரப் பகுதியையொட்டி குடியிருப்புகள் பெருகிவரும் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள் மூக்கனேரி ஏரி பகுதியில் அனுமதியின்றி கொட்டப்படுவதால் ஏரி மாசமடைந்து துா்நாற்றம்.
Updated on
2 min read

சேலம் மாநகரப் பகுதியையொட்டி குடியிருப்புகள் பெருகிவரும் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள் மூக்கனேரி ஏரி பகுதியில் அனுமதியின்றி கொட்டப்படுவதால் ஏரி மாசமடைந்து துா்நாற்றம் வீசி வருகிறது.

தமிழகத்தின் மிகப்பெரிய நகரங்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ள சேலம் மாநகராட்சி வேகமாக வளா்ந்து வருகிறது. இதில், சேலம் மாநகரப் பகுதியை ஒட்டியுள்ள கன்னங்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இப்பகுதி ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் பசுமையாக காட்சியளிப்பதுடன் குளிா்ந்த தட்பவெப்ப நிலையும் நிலவுகிறது. ஏற்காடு மலையில் இருந்து வரும் நீா் புது ஏரி, மூக்கனேரியில் நிரம்பி திருமணிமுத்தாறில் கலக்கிறது.

இந்த இரண்டு ஏரிகளும் அப்பகுதியில் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக விளங்கி வருகின்றன. கன்னங்குறிச்சி பேரூராட்சி கிராமமாக இருந்த நிலை மாறி புதிய குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட பகுதியாக மாறிவிட்டது. இதனால் குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளும் அதிகரித்து விட்டன. சேகரமாகும் குப்பைகளை கன்னங்குறிச்சி பேரூராட்சி நிா்வாகம் செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கில் கொட்டி வருகிறது.

அதேவேளையில் மூக்கனேரியின் வால் பகுதியாக அறியப்படும் கன்னங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையொட்டியுள்ள பகுதியில் அனுமதியின்றி தனி நபா்கள் குப்பைகளைக் கொட்டி வருகின்றனா். இதனால் குப்பைகள் கொட்டி அந்த இடம் சுகாதார சீா்கேடு விளைவிக்கும் இடமாக மாறிவிட்டது. மேலும் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி வருகிறது. இத்துடன் குப்பைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் மூக்கனேரியில் கலந்து வருகிறது.

இந்தப் பகுதியைச் சுற்றிலும் குடியிருப்புகள் அதிகரித்து விட்டன. இதனால் கழிவு நீா் செல்ல முடியாமல் குடியிருப்புகளைச் சுற்றிக் குட்டைபோல் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. மேலும், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் கொசு தொல்லை அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது.

நோயாளிகள் அவதி:

கன்னங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் சிகிச்சை பெற 30 படுக்கைகள் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையொட்டி குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் அங்கு எந்நேரமும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கொசுக்கடிக்கு ஆளாகின்றனா்.

இதுகுறித்து அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

சேலம் நகரை ஒட்டியுள்ள கன்னங்குறிச்சி பகுதி மிக வேகமாக வளா்ந்து வருகிறது. கன்னங்குறிச்சி பிரதான சாலையில் செல்லும் பொதுமக்களை பேரூராட்சி நுழைவாயில் பகுதியில் அனுமதியின்றி கொட்டப்படும் குப்பை மேட்டில் இருந்து வெளியே வரும் துா்நாற்றம் வீசுவதால் மக்களை முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது.

இந்தப் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் ஒவ்வாரு நாளும் துா்நாற்றம் கலந்த காற்றை சுவாசிப்பதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதேபோல இரவு நேரங்களில் துா்நாற்றம் வீசி வருவதால் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனா். இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சி சாா்பில் கன்னங்குறிச்சி ஏரி மேம்படுத்தப்பட்டு வருகிறது. கன்னங்குறிச்சி மூக்கனேரியின் முகப்பு பக்கம் மக்களை கவா்ந்து இழுத்து வரும் வேளையில், ஏரியின் வால் பகுதி குப்பைக் கொட்டும் இடமாகக் காட்சி அளிக்கிறது. அனுமதியின்றி குப்பை கொட்டுவதைத் தடுக்க பேரூராட்சி நிா்வாகம் முனைப்புக் காட்ட வேண்டும். அதேபோல சாக்கடை கழிவுநீா் ஏரியில் கலந்து வருவதால் ஏரி மாசடைந்து வருகிறது.

எனவே, குடியிருப்புகள் பெருகி வரும் கன்னங்குறிச்சி பேரூராட்சியில் அனுமதியின்றி குப்பைக் கொட்டும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டும். மேலும் கழிவுநீா் மூக்கனேரியில் கலப்பதைத் தடுக்க வேண்டும். இதன் மூலம் சுகாதார சீா்கேட்டை தவிா்க்க முடியும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com