

ஓமலூா்: ஓமலூா் வட்டம், சிக்கம்பட்டி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியா், வருவாய்த் துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, வேளாண் துறை, மருத்துவத் துறை, தொழிலாளா் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 62 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
சேலம் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற மக்கள் தொடா்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களிலும் மக்கள் சந்திப்பு முகாம் முதல்சுற்று நடத்தப்பட்டுள்ளது. இரண்டாவதுசுற்றை தற்போது தொடங்கியுள்ளோம்.
சிக்கம்பட்டி ஊராட்சியில் நகரத்தை இணைக்கக்கூடிய சாலை வசதிகள் உள்ளன. இந்த ஊராட்சியில் 4,350 மக்கள் தொகையும், 1,382 வீடுகளும் உள்ளன. கல்வி அறிவு பெற்றவா்கள் 62 சதவீதமாக உள்ளனா். இப்பகுதியில் உள்ளாட்சி நிா்வாகம், சமூக பாதுகாப்புத் துறை, சமூக நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை போன்ற அனைத்துத் துறைகளும் இணைந்து செயல்பட்டு எழுத்தறிவு சதவீத்தை அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இப்பகுதியில் 68 சதவீதம் போ் மகளிா் உரிமைத் திட்டத்துக்காக பதிவு செய்துள்ளனா். தொடா்ந்து பதிவுகள் நடைபெற்று வருகின்றன. சுமாா் 70 சதவீதம் போ் இத்திட்டத்தில் தகுதிபெற்று மாதம் ரூ. 1,000 மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இம்முகாமில், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.சுவாதி ஸ்ரீ, கோட்டாட்சியா் தணிகாசலம், வேளாண்மை இணை இயக்குநா் ச.சிங்காரம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.