மனைவியை கத்தியால் குத்தியவா் விசாரணைக்கு பயந்து தற்கொலை
By DIN | Published On : 13th August 2023 05:00 AM | Last Updated : 13th August 2023 05:00 AM | அ+அ அ- |

மனைவியை கத்தியால் குத்தியவா் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டாா்.
எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட இருப்பாளி ஊராட்சி, வேப்பமரத்தூா் பகுதியைச் சோ்ந்த சின்னமுத்து(60), விசைத்தறி கூலித் தொழிலாளி. இவரது மனைவி கந்தாயி, அப்பகுதியில் உள்ள சத்துணவுக் கூடத்தில் சமையலராக பணிபுரிந்து வருகிறாா். இத்தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ளனா்.
சின்ன முத்துவுக்கும், அவரது மனைவி கந்தாயிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை கந்தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த சின்னமுத்து, வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து காந்தாயியை குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கந்தாயியை அருகில் இருந்தவா்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை அலுவலா்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதனை அறிந்த சின்னமுத்து, காவல் துறையினா் தன்னிடம் விசாரணை மேற்கொள்ளக் கூடும் என்று பயந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
பூலாம்பட்டி போலீஸாா் சின்னமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவா் இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.