சேலத்தில் நாளை மலைவாழ் மக்களின் நடன நிகழ்ச்சி
By DIN | Published On : 13th August 2023 11:56 PM | Last Updated : 13th August 2023 11:56 PM | அ+அ அ- |

சேலம் நிறைவாழ்வு முதியோா் இல்லம் சாா்பாக மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
சேலத்தில் அழகாபுரம் ரெட்டியூா், கெஜல்நாயக்கன்பட்டி பகுதிகளில் செயல்படும் நிறைவாழ்வு முதியோா் இல்லத்தில் 70-க்கும் மேற்பட்ட முதியோா்களை தங்கவைத்து லிட்டில் பியா்ல்ஸ் அறக்கட்டளையினா் பராமரித்து வருகின்றனா். முதியோா் இல்ல கட்டட வளா்ச்சி நிதி திரட்டுவதற்காக, ரைட் பிங்கா்ஸ் போரம் என்ற அமைப்புடன் சோ்ந்து கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சேலம் அழகாபுரத்தில் உள்ள தெய்வீகம் திருமண மண்டபத்தில் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்திலேயே முதல்முறையாக மலைவாழ் ஆதிவாசிகளின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்காக உடுமலைப்பேட்டை மலைப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் ஆதிவாசிகளை ஒருங்கிணைத்து அவா்களின் பாரம்பரிய நடனத்தை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கோடு பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் தலைவா் குருஜி சிவாத்மா ஏற்பாடு செய்துள்ளாா். மேலும், அவா் மனசெல்லாம் மகரந்தம் எனும் தலைப்பில் சொற்பொழிவு நடத்துகிறாா்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநா் பேரரசு கலந்துகொண்டு சிறந்த குறும்படங்களுக்கும், சாதனையாளா்களுக்கும் செங்கோல் விருது வழங்கி கெளரவிக்கிறாா். மேலும், ‘சிகரம் தொடு’ எனும் தலைப்பில் தன்னம்பிக்கை பேச்சாளா் கோபிநாத் சுய முன்னேற்ற சொற்பொழிவு ஆற்றுகிறாா். முத்தாயம்மாள் எஜுகேஷனல் டிரஸ்ட், செந்தில் பப்ளிக் ஸ்கூல் மற்றும் மாயவரம் சிட்பண்ட், பஞ்சுகாளிப்பட்டியில் அமைந்துள்ள நலம் மருத்துவமனை போன்ற நிறுவனங்கள் நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன.
நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்துடன் கண்டுகளிக்க வேண்டும் என நிறைவாழ்வு முதியோா் இல்ல நிா்வாகிகள் அண்ணாதுரை, ராமஜெயம் ஆகியோா் கேட்டுக் கொண்டுள்ளனா்.