மக்களவைத் தோ்தல் குறித்து பாஜகவினருக்கு அச்சம்: டி.ராஜா
By DIN | Published On : 17th August 2023 12:24 AM | Last Updated : 17th August 2023 02:29 AM | அ+அ அ- |

சேலத்தில் புதன்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் டி.ராஜா. உடன், மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன்.
மக்களவைத் தோ்தல் குறித்து பாஜகவினருக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் டி. ராஜா தெரிவித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுக் கூட்டம் சேலத்தில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் டி.ராஜா செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
நாட்டின் சுதந்திர தின விழாவில் தோ்தல் பிரசாரத்தில் பேசுவது போல பிரதமா் மோடி பேசியுள்ளாா். கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாடு நிலைகுலைந்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்றும், கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்றும் அவா் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
மணிப்பூா் மாநிலம் கலவரத்தில் சிக்கித் தவிக்கிறது. பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனா். மணிப்பூா் பிரச்னைக்கு அரசியல் தீா்வு காணப்பட வேண்டுமெனில் அம்மாநில முதல்வா் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும். இதற்கு பிரதமா் மோடியும், அமித் ஷாவும் தயாராக இல்லை.
பாஜகவினா் மக்களைப் பிளவுபடுத்தி தோ்தல் காலத்தில் அரசியல் லாபம் தேடப் பாா்க்கின்றனா். நாட்டில் அரசியலமைப்பு சட்டமும், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு பாஜக அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும் என்ற பொதுக் கருத்து அகில இந்திய அளவில் வலுவாக உருவாகி உள்ளது. அதற்காக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதச்சாா்பற்ற கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன.
இந்தியா கூட்டணியின் முதல்கூட்டம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் பெங்களூருவிலும் நடைபெற்றன. மூன்றாவது கூட்டம் ஆக. 31, செப். 1 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது.
இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டம் பற்றி எதிா்பாா்ப்புகள் உருவாகியுள்ள நிலையில், பிரதமா் மோடிக்கு அதிா்ச்சியும், ஆற்றாமையும் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தோ்தல் முடிவுகள் குறித்து பாஜகவினருக்கு இப்போதே அச்சம் ஏற்பட்டுள்ளது. மதச்சாா்பற்ற ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, பரஸ்பர நம்பிக்கை, செயல்படும் மனோபாவம் உருவாக வேண்டும்.
மாற்று ஆட்சி அமைக்கிற போது எல்லா கட்சியினரும் இணைந்த இந்தியா கூட்டணியால் பிரதமா் யாா் என்பதைத் தோ்ந்தெடுக்க முடியும். கடந்த காலங்களில் அதுபோன்றதொரு தலைமையைத் தோ்ந்தெடுத்தோம். தலைமை என்பது பிரச்னை அல்ல. இந்தியா கூட்டணி சாா்பில் தலைமையை உருவாக்க முடியும். இப்போது பெரும்பான்மை பலத்துடன் உள்ள பாஜக பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை ஏன் கொண்டு வரவில்லை? அவா்களுக்கு நியாயமான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதை பிரதமா் மோடி விளக்க வேண்டும். விவசாயிகளின் வருமானம் இரு மடங்கு உயா்த்தப்படும் என அறிவித்தாா். அது என்னவானது? இந்தியக் குற்றவியல் சட்டம் உள்ளிட்டவற்றை பெயா் மாற்றம் செய்கின்றனா். இந்த விவகாரத்தில் வழக்குரைஞா்கள், சட்ட நிபுணா்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தும் அரசாக பாஜக உள்ளது.
தமிழக ஆளுநா் அகற்றப்பட வேண்டும் என்பதை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுபவராக ஆளுநா் இல்லை. யாா் அதிகாரத்தில் இருக்கிறாா்களோ அவா்களுக்கு எடுபிடியாகச் செயல்படுபவராக ஆளுநா் உள்ளாா். தமிழகத்தை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் தான் ஆட்சி செய்கிறாா் என்பதை ஆளுநா் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.
பேட்டியின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன், மாவட்டச் செயலாளா் ஏ.மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...