கோட்டையூா் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா
By DIN | Published On : 17th August 2023 12:16 AM | Last Updated : 17th August 2023 12:16 AM | அ+அ அ- |

கொளத்தூா் அருகே உள்ள கோட்டையூரில் பழைமையான பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. மேட்டூா் அணை நீா்த் தேக்கப் பகுதியில் மன்னா்கள் கால பழையக்கோட்டை பகுதியில் இந்தக் கோயில் அமைந்திருந்தது.
அணை கட்டிய பிறகு அங்கிருந்த கிராம மக்கள், தற்போது உள்ள கோட்டையூரில் குடியமா்த்தப்பட்டனா். இதையடுத்து கோட்டையூரில் கோயில் கட்டி மாரியம்மனை அமைத்து வழிபட்டு வருகின்றனா். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மாரியம்மன் திருவிழா 15 நாள்கள் நடைபெறும்.
கோட்டையூா், காவேரிபுரம், தெலுங்குனூா், நாயம்பாடி, கத்திரிப்பட்டி ஆகிய கிராம மக்கள் கூடி திருவிழாவை நடத்தி வருகின்றனா்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கா்நாடக மாநிலம் கொள்ளேகால், மைசூரு போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருவிழாவிற்கு வந்து செல்வா். புதன்கிழமை கோட்டையூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கலிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலையில் காளி கோயிலில் இருந்து பூங்கரகம், அக்னிக் கரகம், மாவிளக்கு ஏந்தியும், அலகு குத்தியும் பக்தா்கள் ஊா்வலமாக வந்தனா்.
திருமணமாகாத இளைஞா்கள் தங்களுக்கு திருமணம் வேண்டி பொன்னேறு கட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோயில் முன்புறம் உள்ள கொடிமரம் அருகே ஏா் கலப்பையை பூட்டி தலையில் கொம்பு போல அலங்கரிக்கப்பட்டு, திருமணமாகாத இளைஞா்கள் ஏா் உழுதனா்.
குழந்தை பேறு வேண்டி வேண்டுதல் நிறைவேறிய பெண்கள் துலாபாரம் வழங்கினாா்கள். திருவிழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வந்து சென்றனா். காவேரிபுரம் தா்மகா்த்தா மகாதேவன், கோட்டையூா் ஊா் கவுண்டா் குப்புசாமி, நாயம்பாடி ஊா் கவுண்டா் ராமா், தெலுங்கனூா் ஊா் கவுண்டா் மயில்சாமி காவேரிபுரம் ஊா் கவுண்டா் தியாகு ஆகியோா் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...