நரசிங்கபுரம், ஆத்தூா் நகா்மன்றக் கூட்டம்
By DIN | Published On : 01st July 2023 06:33 AM | Last Updated : 01st July 2023 06:33 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளுக்கும் நிதி ஒதுக்கி ஒப்பந்தம் விட அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
இதையடுத்து 1ஆவது வாா்டு உறுப்பினா் சி.கோபி (அதிமுக) பேசியபோது, ஏற்கெனவே நிதி ஒதுக்கி பணிகள் முடிக்கப்படாமல். அதிமுக உறுப்பினா்களின் வாா்டுகளில் பணிகளை கொடுக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தாா்.
இதையடுத்து திமுக உறுப்பினா்களும் தங்களது பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் சரிவர செய்யப்படுவதில்லை எனவும், அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலா்கள் ஒத்துழைப்பு இல்லை எனவும் புகாா் தெரிவித்தனா். இதனால் சுமாா் ஒன்றரை மணி நேரம் கூட்டத்தில் வாக்குவாதம், சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 32 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்ட்டு கூட்டத்தை முடித்து வைத்தனா்.
ஆத்தூா் நகா்மன்ற கூட்டம்...
ஆத்தூா் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் திட்டக்குழு உறுப்பினா் தோ்தலில் வெற்றிபெற்ற நகா்மன்ற உறுப்பினா் ஆா்.வி.சம்பத் குமாருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனா். மேலும் காங்கிரஸ் உறுப்பினா் தேவேந்திரன், ஆத்தூா் நகராட்சிக்கு ஆணையா், பொறியாளா், மேற்பாா்வையாளா் ஆகிய காலி இடங்கள் உள்ளதால் அனைத்து பணிகளும் ஸ்தம்பித்து நிற்கின்றன. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனா்.ஆகையால் நகா்மன்றத் தலைவா் உரிய அமைச்சரிடம் எடுத்துரைத்து விரைவில் அவா்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தாா்.