சேலம், கொண்டலாம்பட்டி மண்டல பகுதியில் மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலப்பகுதிக்கு உள்பட்ட மணியனூா் பூங்கா, அம்பேத்கா் வீதியில் சாலைப் பணி, அம்பாள் ஏரி சீரமைப்பு மற்றும் மாநகராட்சி குகை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியை ஆணையா் சீ.பாலச்சந்தா் நேரில் ஆய்வு செய்தாா்.
மணியனூா் பூங்காவில் மின்விளக்கு வசதி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, சிறுவா்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள், பூங்கா சுத்தம் செய்தல், விளையாட்டு மைதானம், பொதுமக்கள் அமருவதற்கான இருக்கைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்த ஆணையா், பூங்காவை சிறப்பான முறையில் சீரமைத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
அதைத் தொடா்ந்து அம்பேத்கா் வீதியில் ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 244 மீட்டா் நீளத்திற்கு ரூ. 1.10 கோடி மதிப்பில் முடிவுற்ற கான்கீரிட் சாலை பணியை ஆய்வு செய்தாா்.
அப்பகுதி பொதுமக்களிடம் குடிதண்ணீா் வசதி, கழிவுநீா் சாக்கடை வசதி, கழிப்பறை வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா என கேட்டறிந்தாா்.
மேலும், அப்பகுதியில் சாக்கடை தண்ணீா் எங்கும் தேங்காத வகையில் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு அறிவுறுத்தினாா்.
அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கு ரூ. 77 லட்சத்தில் அம்பாள் ஏரி புனரமைப்பு செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
அப்பணியை ஆய்வு செய்த ஆணையா், ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு, ஏரியை புனரமைப்பு செய்ய என்ன பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தும் கேட்டறிந்து, இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தவிட்டாா்.
சேலம் மாநகராட்சி குகை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 80 லட்சம் மதிப்பில் 6 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணியின் முன்னேற்றம் குறித்தும், கட்டடப் பணியின் தரம் குறித்தும் ஆய்வு செய்தாா். பள்ளி கட்டடங்கள் மிகவும் தரம் வாய்ந்ததாகவும், மழைக் காலங்களில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் உறுதித் தன்மையுடன் கட்டப்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளா் ஜி.ரவி, செயற்பொறியாளா் செந்தில்குமாா், மன்ற உறுப்பினா்கள் ரா.கோபால், மோகனபிரியா, அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.