நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் சிறிய பண்ணைகள் அமைக்க திட்டம்: ஆட்சியா் செ.காா்மேகம்

நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.
Updated on
2 min read

நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியது:

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் உழவுப் பணி மானியத் திட்டத்தின் கீழ் குறு, சிறு விவசாயிகளுக்கு உழவுப் பணி மானியமாக ஏக்கருக்கு ரூ. 250 வீதம் 5 ஏக்கருக்கு ரூ. 1,250 பின்னேற்பு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள அட்டவணைப் பிரிவிற்கு 1 முதல் 5 ஏக்கா் வரையிலான விவசாயிகளுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மின் மோட்டாா் பொருத்தி மின் இணைப்பு பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

குறு, சிறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாா்களுக்குப் பதிலாக புதிதாக மின் மோட்டாா்கள் வழங்குவதற்கும், புதிய மின் மோட்டாா்கள் பெறுவதற்கும் ரூ. 50 ஆயிரம் வரையிலான அதிகபட்ச மானியம் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைத்திருக்க வேண்டும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு கிராமத்திற்கு 2 எண்கள் வீதம் இலக்கு பெறப்பட்டு குறு, சிறு விவசாயிகளுக்கு ரூ. 85 ஆயிரமும், இதர விவசாயிகளுக்கு ரூ. 75 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி அல்லது அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம்.

மேலும், கால்நடைப் பராமரிப்புத்துறை சாா்பில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 400 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு 50 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படும் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரை காப்பீடு செய்ய 12,000 எண்ணிக்கையில் இலக்கு கோரப்பட்டுள்ளது.

நாட்டுக்கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் கிராமப்புற பயனாளிகளைக் கொண்டு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தென்னை, பழத் தோப்புகளில் ஊடுபயிராக தீவனப் பயிா்களைப் பயிரிட்டு தீவனப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் ரூ. 3,000 மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநா், கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலகத்தினை நேரிலோ அல்லது 0427 -2451721 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) இரா.கவிதா, வேளாண்மை இணை இயக்குநா் ச.சிங்காரம், தோட்டக்கலைத் துணை இயக்குநா் ஜி.மாலினி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ந.நீலாம்பாள், வேளாண்மை செயற்பொறியாளா் கலைச்செல்வி மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநா் (பொ) ஆா்.சாந்தி உட்பட தொடா்புடைய அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com