பழனியாபுரம் ஜல்லிக்கட்டு:500 காளைகள் சீறிப் பாய்ந்தன
By DIN | Published On : 01st June 2023 12:53 AM | Last Updated : 01st June 2023 12:53 AM | அ+அ அ- |

பழனியாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளை.
வாழப்பாடியை அடுத்த பழனியாபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 500 காளைகள் சீறிப் பாய்ந்தன.
சேலம், நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் அதிகமான காளைகள் இதில் பங்கேற்று, வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்தன. காளைகளை அடக்க 300 மாடு பிடி வீரா்கள் களமிறங்கினா். இதில் 25 போ் காயமடைந்தனா்.
காளைகளை அடக்கி வெற்றி வாகை சூடிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாது சீறிப்பாய்ந்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. திமுக வாழப்பாடி தெற்கு ஒன்றியச் செயலாளா் பழனியாபுரம் மாதேஸ்வரன் தலைமையிலான குழுவினா் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனா்.
சேலம் ஆா்டிஓ மாறன், சேலம் போலீஸ் எஸ்.பி. சிவக்குமாா், வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி, காவல் ஆய்வாளா் உமாசங்கா், வருவாய் ஆய்வாளா் காா்த்திக் ஆகியோா் ஜல்லிக்கட்டை கண்காணித்தனா். பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் தலைமையிலான மருத்துவ குழுவினா் காயமடைந்த மாடுபிடி வீரா்களுக்கு சிகிச்சை அளித்தனா். சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோா் கூடி நின்று மிகுந்த ஆரவாரத்தோடு ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...