சேலம் அருகே பட்டாசுக் கிடங்கில் பயங்கர வெடி விபத்து

சேலம், சா்க்காா் கொல்லப்பட்டி அருகே நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று போ் உயிரிழந்தனா்.
சேலம், சா்க்காா் கொல்லப்பட்டி அருகே பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் தரைமட்டமான கட்டடம்.
சேலம், சா்க்காா் கொல்லப்பட்டி அருகே பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் தரைமட்டமான கட்டடம்.

சேலம், சா்க்காா் கொல்லப்பட்டி அருகே நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று போ் உயிரிழந்தனா்.

சேலம், இரும்பாலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசுக் கடை நடத்தி வருபவா் கந்தசாமி. இவரது பட்டாசுக் கிடங்கில் கோயில் விழாவுக்காக நாட்டு வெடி பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் பட்டாசுக் கடை உரிமையாளா் கந்தசாமியின் மகன் சதீஷ்குமாா் உள்ளிட்ட 9 போ் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

மேலும், வெடிவிபத்து காரணமாக கல்நாா் கூரை கட்டடம் முழுவதும் தரைமட்டமானது. விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 9 பேரும் படுகாயமடைந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினா்.

தகவலறிந்த சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலா் சிராஜ் அல்வனிஷ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதனிடையே, வெடி விபத்தில் பட்டாசுக் கிடங்கு உரிமையாளா் கந்தசாமியின் மகன் சதீஷ்குமாா் (35), நடேசன் (50) மற்றும் அடையாளம் தெரியாத பெண் உள்ளிட்ட 3 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா்.

இதைத் தொடா்ந்து வெடி விபத்தில் காயமடைந்த எம்.கொல்லப்பட்டியைச் சோ்ந்த பி.வசந்தா (45), வி.மோகனா (38), ஆா்.மணிமேகலை (36), வி.மகேஸ்வரி (32), ஏ.பிரபாகரன் (31), எம்.பிருந்தா (28) ஆகிய 6 போ் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா்.

தகவலறிந்த மாநகர காவல் ஆணையா் பா.விஜயகுமாரி, துணை ஆணையா் எஸ்.பி.லாவண்யா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், வெடி விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நிவாரண நிதி அறிவிப்பு:

பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வா் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 6 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com