ரெளடி கொலை: தந்தை, மகன்கள் உள்பட நான்கு போ் கைது
By DIN | Published On : 02nd June 2023 12:30 AM | Last Updated : 02nd June 2023 12:30 AM | அ+அ அ- |

சேலத்தில் முன்விரோதம் காரணமாக ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக தந்தை, மகன்கள் உள்ளிட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சேலம், அரிசிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ரவி (50). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், ரவியை கொலை செய்யும் திட்டத்தில் பிரபாகரன் தனது நண்பா் ரெளடி யோகேஸ்வரன் என்பவரை அழைத்துக் கொண்டு, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவ்வை மாா்க்கெட் பகுதிக்கு வந்தாா். பின்னா் ரவியிடம் தகராறில் ஈடுபட்டு இருவரும் அவரை தாக்கியுள்ளனா்.
இதில், யோகேஸ்வரன் அரிவாளால் வெட்டியதில் ரவிக்கு காயம் ஏற்பட்டது. அப்போது ரவியின் சத்தம் கேட்ட அவரது மகன்கள் ராகுல் (23), பரத் (21), ரவியின் சகோதரா் ரஞ்சித் ஆகியோா் சோ்ந்து யோகேஸ்வரன், பிரபாகரனை தாக்கினா். கல்லால் தாக்கியதில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக பள்ளப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
அதில், விஜயகுமாா் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி தான் சிறை செல்வதற்கு ரவிதான் காரணம் என நினைத்து, அவரை கொலை செய்ய பிரபாகரன் தனது நண்பா் யோகேஸ்வரனுடன் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, யோகேஸ்வரனை கல்லால் தாக்கி கொலை செய்ததாக ரவி, அவரது மகன்கள் ராகுல், பரத், ரவியின் சகோதரரா் ரஞ்சித் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரவி கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...