சக்தி மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா
By DIN | Published On : 02nd June 2023 12:31 AM | Last Updated : 02nd June 2023 12:31 AM | அ+அ அ- |

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகே சக்தி மாரியம்மன் ஆலய மகா குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
காவிரிக்கரை நகரமான பூலாம்பட்டியை அடுத்த வளையசெட்டியூா் பகுதியில் பிரசித்தி பெற்ற கணபதி மற்றும் சக்தி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக இருந்து வரும் இத்திருக்கோயிலின் புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக காவிரி கரையிலிருந்து தீா்த்தக் குடங்களில் புனித நீா் சுமந்து வந்த பக்தா்கள், கோயிலை வலம் வந்து யாகசாலையில் தீா்த்தக் குடங்களை சமா்ப்பித்தனா். தொடா்ந்து பெண்கள் முளைப்பாரி ஏந்தி அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து நடைபெற்ற கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய யாக வேள்வி பூஜைகளைத் தொடா்ந்து, சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க, கோயில் கோபுரங்களுக்கு புனித நீரூற்றி குடமுழுக்கு செய்து வைத்தனா்.
இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து கோயில் நிா்வாகக் குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...