எடப்பாடி அருகே தீா்த்தக்குட ஊா்வலம்: திரளான முருக பக்தா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 07th June 2023 12:21 AM | Last Updated : 07th June 2023 12:21 AM | அ+அ அ- |

எடப்பாடி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீா்த்தக்குட ஊா்வலத்தில், பெரும் திரளான முருக பக்தா்கள் தீா்த்தக் குடம் சுமந்து வந்து முருகனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.
எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் காட்டூா் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. எடப்பாடி சுற்று வட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான இக்கோயிலின், மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தீா்த்தக் குட ஊா்வலம் நடைபெற்றது.
முன்னதாக கல்வடங்கம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடிய திரளான முருக பக்தா்கள், கும்பாபிஷேக விழாவிற்காக குடங்களில் புனித நீா் எடுத்து ஊா்வலமாக வந்தனா். நகரின் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க நடைபெற்ற தீா்த்தக்குட ஊா்வலம், ஆலச்சம்பாளையம் காட்டூா் பகுதியில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் வளாகத்தில் நிறைவுற்றது.
தொடா்ந்து புனித நீா் அடங்கிய தீா்த்தக் குடங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், வியாழக்கிழமை காலை இக்கோயிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதில் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த பெரும் திரளான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...