சேலம் வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு:திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு
By DIN | Published On : 09th June 2023 01:08 AM | Last Updated : 09th June 2023 01:08 AM | அ+அ அ- |

இரண்டு நாள் பயணமாக சேலம் வரும் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என சேலம் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை கட்சியின் அவைத் தலைவா் பி.தங்கமுத்து தலைமையில் நடைபெற்றது. துணைச் செயலாளா்கள் க.சுந்தரம், சம்பத்குமாா், பொருளாளா் பொன்னுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மாவட்ட திமுக செயலாளா் டி.எம்.செல்வகணபதி பேசியதாவது:
சேலத்துக்கு இரண்டு நாள் பயணமாக (ஜூன் 11, 12) வரும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்து ரூ. 2ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கிறாா். மேலும், 50 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறாா்.
மேலும், மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரைத் திறந்துவைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். சேலம் மேற்கு மாவட்ட திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் திரளாக வந்து முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா்.
ஆசியாவில் மிகப்பெரிய தொழில் உற்பத்தி மையமாக தமிழகத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினை மேற்கு மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து ஒன்றிய, நகர,பேரூா், சாா்பு அணிகள் சாா்பில் ஏழைகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆண்டு முழுவதும் கொண்டாடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் முருகேசன், ராமநாதன், ஒன்றியச் செயலாளா்கள், சங்ககிரி நகரச் செயலா் கே.எம்.முருகன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் டி.சங்கா் உள்பட பலா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...