சேலத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
By DIN | Published On : 15th June 2023 11:28 PM | Last Updated : 15th June 2023 11:28 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் ஜூன் 25 வரை நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ‘தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்’ இரு வாரங்கள் அனுசரிக்கப்படுகிறது. இம்முகாமின் முக்கிய நோக்கமானது ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலுமாக தவிா்த்தல் ஆகும். இவ்வருட முகாமானது ஜூன் 12 முதல் ஜூன் 25 வரை நடைபெறுகிறது.
முகாமில், கிராம சுகாதார செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் ஐந்து வயது குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று ஓ.ஆா்.எஸ். எனப்படும் உப்புநீா் கரைசல் தூள் பொட்டலங்களை இலவசமாக வழங்கி வயிற்றுப்போக்கின் போது அதனை உபயோகிப்பது பற்றி விழிப்புணா்வூட்டுவா்.
அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் ஓ.ஆா்.எஸ். பகுதி அமைக்கப்படும் மற்றும் ஓ.ஆா்.எஸ். உப்பு நீா் கரைசல் தயாரிப்பது, கை கழுவும் முறை, பிரத்யேக தாய்ப்பால் அளிக்கும் முறை, இணை உணவு வழங்கும் முறை பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்
ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தை இறப்புக்கான முக்கிய காரணங்களில் வயிற்றுப்போக்கு ஒன்றாகும். அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்போக்கால் குழந்தைகளுக்கு நீா்ச்சத்து குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும்.
இந்நீா்ச்சத்து குறைபாட்டினை தடுக்க ஓ.ஆா்.எஸ். (உப்புநீா் கரைசல்) எனும் உயிா்காக்கும் அமுதம் அளிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் இறப்பினை தடுக்கலாம். மேலும் வயிற்றுப்போக்கின் போது துத்தநாக மாத்திரையை 14 நாள்களுக்கு தொடா்ந்து கொடுப்பதால், வயிற்றுப்போக்கு விரைவில் குணமடையும்.
தேசிய அளவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 501 துணை சுகாதார நிலையங்கள், 13 அரசு மருத்துவமனைகள், 2,696 அங்கன்வாடி மையங்களில் இம்முகாம் நிறுவப்பட உள்ளது. இம்முகாம்களில் பொது சுகாதாரம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட துறைகளைச் சாா்ந்த 3,212 பணியாளா்கள் இணைந்து பணியாற்ற உள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் முகாமின் மூலம் 2,60,000 ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் பயன்பெற உள்ளனா் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.