பாமக நிறுவனா் ராமதாஸ், வழக்குரைஞா் பாலு ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் விழாவின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அக் கோயிலுக்கு சீல் வைத்து, காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கோயில் மோதல் தொடா்பாக விமா்சித்துப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் மீது வன்னியா் சங்கம் சாா்பில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 4 இல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில், சேலம் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட பொருளாளா் காஜா மைதீன் தலைமையிலானவா்கள், பாமக நிறுவனத் தலைவா் ராமதாஸ், வழக்குரைஞா் பாலு ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி புதன்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில், பாமக நிறுவனா் ராமதாஸ் தூண்டுதலின் பேரில் திரெளபதி அம்மன் கோயிலில் கூடியிருந்த மக்கள் மத்தியில் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கும் மரபான தீண்டாமையை தொடா்ந்து வலியுறுத்தும் வகையில் பேசிய பாமகவைச் சோ்ந்த வழக்குரைஞா் பாலு ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடா்ந்து சேலம் நகரக் காவல் நிலையத்திலும் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.