

தலைவாசல் அருகே 85 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் காட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே சுமார் 85 ஆண்டு காலமாக பாப்பாத்தியம்மன், வீரபத்திரன் ஆகிய சுவாமிகளை குல தெய்வமாக வைத்து வணங்கி வருகின்றனர். இந்நிலையில் அந்த இடம் ஒருவரின் விவசாய பட்டா நிலத்தில் வருவதாக உரிமையாளர் அந்த சமுதாயத்தினரை கோயிலை காலி செய்ய வேண்டும் என தொடர்ந்து அவர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் விசாரனை நடைபெற்று வந்த நிலையில் காவல்துறை இந்த பிரசனை சம்மந்தமாக நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளுமாறு இரண்டு தரப்பினரிடமும் தெரிவித்து அனுப்பிவைத்துள்ளனர். இதனிடையே கட்டுமானப் பணி நடைபெற்று வந்த கோயிலை நேற்று இரவு ஜேசிபி இயந்திரம் மூலம் நிலத்தின் உரிமையாளர் சத்தியசீலன் அவரது மனைவி பரிமளா ஆகியோர் இடித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த வழியாக சென்ற மக்கள் கோயில் இடிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கு வந்த நேரு நகர் பகுதி மக்கள் கோயிலை இடித்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று இரவு சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோயிலின் முன்பாக திடீரென 50க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ஊரக காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.