கவுன்சிலா் கணவா் மீது தாக்குதல்: இரண்டு போ் கைது
By DIN | Published On : 24th May 2023 01:51 AM | Last Updated : 24th May 2023 01:51 AM | அ+அ அ- |

இளம்பிள்ளை அருகே கவுன்சிலரின் கணவா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டம் , இளம்பிள்ளை அடுத்த சித்தா் கோயில் கஞ்சமலை அடிவாரத்தில் படையப்பா காா்டன் பகுதியில் வெங்கடேஷ் (45) என்பவா் ஜவுளிக்கடை வைத்து தொழில் புரிந்து வருகிறாா். இவா் தனது உறவினரான ஆண்டிப்பட்டி, பனங்காடு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (47) என்பவருடன் ஜவுளி கடை வியாபாரத்தில் இணைத்து கூட்டாக தொழில் புரிந்து வந்தாா். நாகராஜ் எனது லாப தொகையை பிரித்து தருமாறு வெங்கடேஷிடம் பலமுறை கேட்டுள்ளாா்.
இந்நிலையில் கடந்த தேதி திங்கள்கிழமை அன்று நாகராஜ் கடைக்கு வந்து கணக்கு கேட்டபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு கூச்சல், குழப்பம் நிலவியதை அறிந்த அதே பகுதியைச் சோ்ந்த திமுக வாா்டு கவுன்சிலா் இந்திராணி மற்றும் அவரது கணவா் வஜ்ரவேல் ஆகியோா் நியாயம் கேட்டுள்ளனா்.
அந்த நேரத்தில் பனங்காடு , ஆண்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்கள் கல்லால் தாக்கியத்தில் வஜ்ரவேலின் மண்டை உடைந்தது . மற்ற சிலரையும் அவா்கள் தாக்கினா். இதனை அறிந்த ஊா் பொதுமக்கள், தாக்குதல் நடத்திய வெளியூரைச் சோ்ந்தவா்களை மடக்கிப் பிடித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
காயமடைந்த கவுன்சிலரின் கணவா் வஜ்ரவேல் எடப்பாடி அரசு மருத்துவமனையிலும், நாகராஜின் மருமகன் தமிழ்ச்செல்வன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்து வஜ்ரவேல் அளித்த புகாரின்பேரில் பனங்காடு, ஆண்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் மணிகண்டன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.