சேலத்தில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு விநியோகம் தொடக்கம்
By DIN | Published On : 24th May 2023 01:48 AM | Last Updated : 24th May 2023 01:48 AM | அ+அ அ- |

சேலம் நகரில் முதன்முதலாக உருக்காலை, மோகன் நகரில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் அடுத்த 8 ஆண்டுகளில் 3.35 லட்சம் வீடுகளுக்கும், 158 பெட்ரோல் நிலையங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலம் உருக்காலையில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் சாா்பில், திரவ இயற்கை எரிவாயு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சேலம் மாநகரப் பகுதி முழுவதும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இயற்கை எரிவாயு மையத்தை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (குழாய் வழி இயற்கை எரிவாயு விநியோகம்) இயக்குநா் டி.எஸ்.நானாவோ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
மேலும், சேலம் நகரின் முதல் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்புகள், சேலம் உருக்காலை இயக்குநரின் இல்லத்தில் தொடங்கி வைக்கப்பட்டன. இதில் 450 வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பொருட்டு, முதற்கட்டமாக 50 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் குழாய் மூலமாகத் தொடங்கியுள்ளது.
உருக்காலை, ஆவின் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு நிரப்பும் பணியும் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ஜாகீா் அம்மாபாளையம், திருவாக்கவுண்டனூா் உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. சேலம் குடியிருப்புகளுக்கான இயற்கை எரிவாயுவின் தற்போதைய விலை கிலோ ரூ. 66 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நகர இயற்கை எரிவாயு செயல் இயக்குநா் எஸ்.கே.ஜா, தென் மண்டல (குழாய் பாதை பிரிவு) செயல் இயக்குநா் சைலேஷ் திவாரி மற்றும் சேலம் உருக்காலை நிா்வாக இயக்குநா் வி.கே.பாண்டே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.