சேலம் மேற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 24th May 2023 01:55 AM | Last Updated : 24th May 2023 01:55 AM | அ+அ அ- |

சேலம் மேற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டி பகுதியில் உள்ள தனியாா் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் சுதிா் முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் கலைச்செல்வன் வரவேற்றுப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி ராமலிங்கம், கட்சி வளா்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து நிா்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தமிழக அரசு சேலம் மாவட்டம், மேட்டூா் அரசு மீன் வளத்துறை அலுவலகத்தில் செயல்படாமல் உள்ள ஐஸ் தொழிற்சாலையை மீனவா்கள் பயன்பெறும் வகையில், புனரமைத்து செயல்படுத்த வேண்டும்; அதிக வாகனப் போக்குவரத்துள்ள ஓமலூா் பேருந்து நிலையத்தினை வேறு பகுதிக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும்; சங்ககிரி பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும்; சேலம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான சரபங்கா நதி நீா்வழிப் பாதையில் உள்ள தனியாா் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்; மற்றும் மாவட்ட முழுவதும் மத்திய அரசின் ஜல் சக்தி திட்டத்தில் நடைபெற்ற முறையீடுகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியின்றி நடைபெற்று வரும் மதுபான விற்பனையைத் தடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், மாவட்டப் பாா்வையாளா் தசரதன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் சி.சௌந்தரராஜன், பி. பாலசுப்பிரமணியம், சி.பி ரவி, சிவலிங்கம் உள்ளிட்ட திரளான பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.