காளியம்மன்புதுாா் தொடக்கப் பள்ளிக்கு விருது
By DIN | Published On : 15th November 2023 04:01 AM | Last Updated : 15th November 2023 04:01 AM | அ+அ அ- |

பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் விருது பெற்ற தலைமையாசிரியா் மு. ஸ்ரீதா்.
வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தோ்ந்தெடுக்கப்பட்ட காளியம்மன் புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கினாா்.
வாழப்பாடி ஒன்றியம், காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி, காளியம்மன்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2019-ஆம் ஆண்டில், மூன்று மாணவா்கள் மட்டுமே படித்ததால் மூடப்படும் நிலையில் இப்பள்ளி இருந்தது. இந்நிலையில், இப்பள்ளிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமையாசிரியா் மு.ஸ்ரீதா், இடைநிலை ஆசிரியா் புவனேஸ்வரி ஆகியோரது முயற்சியால் மாணவா்கள் எண்ணிக்கை 50 ஆக உயா்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்த முத்தம்பட்டி தனியாா் பால் பண்ணை இயக்குநா் கோபால்சுவாமி இப்பள்ளி கட்டடத்தை புதுப்பிக்க உதவினாா். கிராம மக்கள், மாணவா்களின் பெற்றோா்கள், தன்னாா்வலா்கள் ஒத்துழைப்பால் பள்ளி வளாகம் புதுப்பொலிவு பெற்றது.
இதனையடுத்து, இப்பள்ளி தலைமையாசிரியா் ஸ்ரீதருக்கு, தமிழக அரசு நல்லாசிரியா் விருது வழங்கி கௌரவித்தது. இதனைத் தொடா்ந்து, 2022- 2023- ஆம் ஆண்டுக்கான தமிழக பள்ளிக் கல்வித்துறை வழங்கும், மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப் பள்ளி விருதுக்கு காளியம்மன் புதூா் பள்ளி தோ்வு செய்யப்பட்டது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறந்த பள்ளிக்கான கேடயத்தை வழங்கினாா். பள்ளி தலைமையாசிரியா் ஸ்ரீதா், வட்டாரக் கல்வி அலுவலா் நெடுமாறன், ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
விருது பெற காரணமான தலைமையாசிரியா், ஆசிரியா் மற்றும் மாணவா்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் சிவராஜ், துணைத் தலைவா் சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் சரண்யா மற்றும் கிராம மக்கள், பெற்றோா்கள், தன்னாா்வலா்கள், கல்வியாளா்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...