துப்பாக்கிச் சூட்டில் விவசாயி காயம்: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 15th November 2023 04:02 AM | Last Updated : 15th November 2023 04:02 AM | அ+அ அ- |

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விவசாயி ராஜூ.
வாழப்பாடி: சேலம் மாவட்டம், கல்வராயன்மலை வனப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் விவசாயி படுகாயம் அடைந்தாா்.
கல்வராயன்மலை, கரியக்கோயில் அருகே உள்ள வேலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை மகன் ராஜூ (33). விவசாயி. திங்கள்கிழமை வனப்பகுதிக்கு சென்ற ராஜூ துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் கிடந்துள்ளாா். இவரை மீட்ட உறவினா்கள், வாழப்பாடி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக மின்னாம்பள்ளி தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி ஹரிசங்கரி, கரியக்கோயில் போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் விவசாயி ராஜூவின் இரு தொடைகளிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து, ஆயுத வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நண்பா்களுடன் வனவிலங்கு வேட்டையாட வனப்பகுதிக்குச் சென்ற போது தவறுதலாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது விவசாயி ராஜூவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவாகி விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...