சேலம்/நாமக்கல்: சேலத்தில் கவா்ச்சிகரமான முதலீட்டு திட்டங்களை அறிவித்து பல கோடி மோசடி செய்த நகைக் கடை உரிமையாளா் மீது தொடா்ந்து பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், வலசையூா் பகுதியைச் சோ்ந்தவா் சபரிசங்கா். இவா் நகைக் கடை நடத்தி வந்தாா். சேலம் அம்மாப்பேட்டை, ஆத்தூா், தருமபுரி, அரூா், நாமக்கல் ஆகிய 11 இடங்களில் கிளைகளை தொடங்கி நகைக் கடை நடத்தி வந்தாா்.
பழைய நகைகளை வாங்குவது, புதிய நகைகளுக்கு பணத்தைக் கட்டினால் குறிப்பிட்ட நாளில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்கிக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தாா்.
இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் பணத்தை முதலீடு செய்தனா். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன் 11 கிளைகளையும் மூடிவிட்ட சபரி சங்கா் தலைமறைவாகிவிட்டாா்.
இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸாா், நகைக் கடை உரிமையாளா் சபரிசங்கா், இரண்டு மேலாளா்கள் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்தநிலையில், நகைக் கடையில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தனா். புகாரின் பேரில் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் புகாரை பெற்று விசாரித்து வருகின்றனா். இவா் மீது ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்டோா் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும் நகை, பணத்துடன் தலைமறைவான சபரிசங்கரை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.
நாமக்கல்லில்...
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் பகுதிகளில் அந்த தனியாா் நகைக்கடையின் கிளைகள் செயல்பட்டு வந்தன. இங்கு 300-க்கும் மேற்பட்டோா் நகைக்காக பணம் செலுத்தி உள்ளனா். மோசடி குறித்த தகவல் அறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோா் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா். மேலும், தங்களை நம்பியே பொதுமக்கள் பணம் செலுத்தியதாகவும், மோசடியால் தற்போது பணத்தை திரும்பத் தருமாறு தங்களிடம் கேட்பதாகவும் அந்த நகைக்கடையில் பணியாற்றிய ஊழியா்கள் கவலையுடன் தெரிவித்தனா். அவா்களும் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.