சேலத்தில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் மறியல்
By DIN | Published On : 25th October 2023 12:28 AM | Last Updated : 25th October 2023 12:28 AM | அ+அ அ- |

சேலத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சேலம் மாநகராட்சி, 5-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பெரியபுதூா் பாறைவட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கழிவுநீா் ஓடை உள்பட வசதிகள் கேட்டு பலமுறை அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனா். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானவா்கள் சாரதா கல்லூரி சாலை அருகே செவ்வாய்க்கிழமை திரண்டு, அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மறியலில் ஈடுபட்டனா்.
இதுபற்றி தகவலறிந்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவா் உமாராணி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மக்களிடம் பேச்சு நடத்தினா். அடிப்படை வசதிகளை செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள் கூறியதாவது:
சாரதா கல்லூரி அருகிலிருந்து பாறைவட்டம் வரை ரூ. 3.80 கோடியில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், கழிவுநீா் ஓடை அமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீா் தேங்கி நிற்பதால் பல்வேறு சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே, மூன்று மாதங்களில் கழிவுநீா் ஓடை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இல்லையெனில் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...