

தொடா் விடுமுறையையொட்டி, பூலாம்பட்டியில் உள்ள காவிரி கதவணை நீா்த்தேக்க பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கப்பட்டு, நீா் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த அணைப் பகுதியில் சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி, ஈரோடு மாவட்ட எல்லையான நெருஞ்சிப்பேட்டை ஆகிய இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இக் கதவணைப் பகுதியில் நிலவும் இயற்கைச் சூழலையும், ரம்மியமான காட்சிகளைக் காணும் நோக்கில், இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆயுதபூஜை முன்னிட்டு தொடா் விடுமுறை காரணமாக, பூலாம்பட்டி காவிரி கதவணைக்கு வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகள் அதிகம்போ் வந்திருந்தனா். குறிப்பாக அவா்கள் நீா்மின் உற்பத்தி நிலையம், கதவணை மேம்பாலம், மதகுபகுதி, நீா் உந்து நிலையம், நீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும், காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதியில் உள்ள இயற்கை அழகையும் கண்டு ரசித்தனா்.
பலா் விசைப்படகு சவாரி செய்தும், அங்கு விற்கும் மீன் உணவுகளை உண்டும் பொழுதுபோக்கினா். அருகில் உள்ள கைலாசநாதா் கோயில், காவிரித் தாய் சன்னிதி, பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் ஆலயம், காவிரி படித்துறை விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.