என்.எஸ்.எஸ். முகாம்களை உண்டு உறைவிட முகாமாக அமைக்க வேண்டும்
By DIN | Published On : 26th September 2023 05:34 AM | Last Updated : 26th September 2023 05:34 AM | அ+அ அ- |

ஓமலூா்: நாட்டு நலப்பணித்திட்ட முகாம்களை கிராமங்களில் உண்டு உறைவிட முகாமாக அமைக்க வேண்டும் என்று பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளா் கே.தங்கவேல் கூறினாா்.
பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் சதீஷ் வரவேற்றாா். புத்தாக்கப் பயிலரங்கினைத் தொடங்கி வைத்து பதிவாளா் கே.தங்கவேல் பேசியதாவது:
பொதுமக்களுக்கு உதவி செய்யும் பாங்குடைய மாணவா்களை உருவாக்குவதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் அக்கறை செலுத்த வேண்டும். இதன்மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கும் சூழலை உருவாக்க வேண்டும். நாட்டு நலப்பணித் திட்ட முகாம்களை கிராமங்களில் உண்டு உறைவிட முகாமாக அமைக்க வேண்டும். கிராமங்களில் தங்கி சேவையாற்றும்போது விவசாயிகளின் வாழ்வியலை மாணவ - மாணவியா் நேரில் கண்டுணரும் வாய்ப்பு கிடைக்கும். இதன்மூலம் நாட்டு நலப்பணித் திட்டத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறும் என்றாா்.
இதனையடுத்து, பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் புதுதில்லி, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்ட என்.எஸ்.எஸ். மாணவா்கள், தேசிய அளவிலான முகாம்களில் சிறப்பாக செயல்பட்டவா்களை பாராட்டி பதிவாளா் கே.தங்கவேல் சான்றிதழை வழங்கினாா்.
இந்நிகழ்வில், மாநில நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் எம்.செந்தில்குமாா், பேராசிரியா்கள் ஏ.முத்துசாமி, பெ.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பல்கலைக்கழகத் திட்ட அலுவலா் டி.இளங்கோவன் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...