மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்திசிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்
By DIN | Published On : 26th September 2023 05:39 AM | Last Updated : 26th September 2023 05:39 AM | அ+அ அ- |

சேலம், நெத்திமேடு பகுதியில் உள்ள அரிசி ஆலையில் ஊழியா் இன்றி காணப்பட்ட ஆலை.
சேலம்: மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள், அரிசி ஆலைகள் வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டன.
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கத்தின் சாா்பில் முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் திங்கள்கிழமை அடையாள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. சமையல் எண்ணெய் ஆலைகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. சேலம் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
இதுதொடா்பாக, சேலம் அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் கூறியதாவது:
மின்கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சிறு, குறுந்தொழில் வணிகா்கள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், அவா்களுக்கு ஆதரவாக அரிசி உற்பத்தி ஆலைகளும் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் 13 பெரிய அரிசி ஆலைகளும், 200-க்கும் மேற்பட்ட சிறிய அரிசி ஆலைகளும் உள்ளன. மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அரிசி உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இத்தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்ளனா். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் நாளொன்றுக்கு ரூ. 5 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...